தாயகத்தின் வவுனியா மாவட்டம், வெடுக்குநாறியில் அமைந்துள்ள ஆதிசிவன் கோயிலில் சிவன் இராத்திரிப்பூசையில் கலந்துகொள்ளச் சென்ற மக்களைச் சிறிலங்காப் பொலிசார் தடுத்து நிறுத்தி ஊர்திகளில் செல்லவிடாது கடுமையான வெப்பத்தின் மத்தியில் குடிதண்ணீரை கூட கொண்டுசெல்ல விடாது பெண்கள் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை நடந்துசெல்லுமாறு பணித்தனர். பின் அமைதியாக சிவன் இராத்திரிப்பூசையில் கலந்துகொண்ட மக்களில் 8பேரைச் சிறிலங்காப் பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அத்தோடு தமிழர் மதத் தலங்களைப் புத்த விகாரைகளாக மாற்றும் திட்டமிட்ட தொடர்நடவடிக்கைக்கு வழிவகுக்கும் சிறிலங்கா அரசின் அண்மைக்காலச் செயற்பாடுகளைத் தமிழ் இளையோர் அமைப்பாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சாசனத்தின் படி, அனைத்து தனிநபர்களுக்கும் மத நம்பிக்கையின் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை உள்ளது. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் 18 வது பிரிவு கூறுவதாவது: “ஒவ்வொருவருக்கும் சிந்தனை, விழிப்புணர்வு மற்றும் மதச்சுதந்திரத்திற்கான உரிமை உண்டு; இந்த உரிமையில் மதம் அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரம் மற்றும் ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை, தனியாகவோ அல்லது சமூகத்தில் மற்றவர்களுடன் பொது அல்லது தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தும் சுதந்திரம் ஆகியவை அடங்கும்.
மதத்தலங்களுக்கான அணுகலைத் தடுப்பது, வழிபாடு செய்பவர்களைக் கைது செய்தல் மற்றும் தமிழர் வாழ்விடங்களைப் புத்தவிகாரைகளாக மாற்றும் செயற்பாடுகளென. இவ்வாறான அடிப்படை உரிமைகளை சிறிலங்கா அரசு அப்பட்டமாக மீறிவருகின்றது. மேலும் அவை சர்வதேச சட்டத்தின்படி மோசமான மனிதஉரிமை மீறல்களாக கண்டிக்கப்பட வேண்டும்.
சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் அடக்குமுறைகளை நிறுத்தவும், மதச்சுதந்திரத்தை மதித்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும், தமிழர் வாழ்விடங்களைப் புத்தவிகாரைகளாக மாற்றுவதைச் சிறிலங்கா அரசு உடனடியாக நிறுத்தவும் வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.
சர்வதேச சமூகம் இந்தப் பிரச்சனையைத் தொடர்ந்தும் கண்காணித்து, எவ்வாறு உலகெங்கிலும் உள்ள மத உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் மதிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துகின்றதோ, அவ்வாறே தமிழீழ மக்களும் அனைத்து உரிமைகளுடனும் வாழ ஆவன செய்யவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
Comments